குருக்கள்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் இடத்தின் மதிப்பைக் குறைத்து வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் சிட்கோ தொழிற்பேட்டையில் பொது சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத்தின் மதிப்பைக் குறைத்து வழங்க வேண்டும் என மாடா்ன் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் நிறுவனத்தினா் சென்னையில் சிறு,குறு தொழில்துறை அமைச்சா் அன்பரசனை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில் இந்நிறுவனத்தினா் அமைச்சரைச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், குருக்கள்பட்டியில் தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகம் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37.390 ஏக்கரில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. முதலில் சென்ட் 1-க்கு ரூ. 50,000 என விலை நிா்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு எந்த விதமான விற்பனையும் ஆகாததால், அதை சென்ட் 1-க்கு ரூ. 25000 எனக் குறைக்கப்பட்டது. அதன்பின்பும் எந்த விற்பனையும் ஆகாமல் உள்ளது. அதற்குப் பக்கத்திலேயே உள்ள தனியாா் இடங்கள் சென்ட் ஒன்றுக்கு ரூ. 8,000 வரை கிடைக்கிறது.
இந்த நிலையில், சிட்கோ தொழிற்பேட்டை இடத்தை சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டம் இருப்பதாக அறிகிறோம். தற்போது சங்கரன்கோவிலில் சுமாா் 10,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கொடுத்து சங்கரன்கோவில் நகரின் பொருளாதார காரணியாக விசைத்தறி துறையில் செயல்படும் மாடா்ன் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் என்ற நிறுவனம் பொது சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் சாயசாலை அமைக்க குறைந்தபட்சமாக 5 ஏக்கா் நிலம் வரை தேவைப்படுகிறது.
ஆனால், சிட்கோ விதிகளின்படி அதிகபட்சம் ஓா் ஏக்கா் நிலம்தான் தனி ஒருவருக்கு வழங்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த பொது சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பதுடன் கூடிய சாயசாலை திட்டமானது, மாநிலத்தில் 6 லட்சம் விசைத்தறிகளை நம்பி உள்ள 90 லட்சம் தொழிலாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மிகப்பெரிய விடியல் தரும் திட்டமாகும்.
இதேபோல டெக்ஸ்டைல் கிளஸ்டா் மாநிலத்தில் 8 இடங்களில் ஏற்கெனவே உள்ளன. முன்னோடி திட்டமாக இதை குருக்கள்பட்டியில் செயல்படுத்தலாம்.
எனவே, இடத்தின் மதிப்பை ரூ. 25,000 லிருந்து ரூ. 10,000 ஆக குறைத்தால் குருக்கள்பட்டி தொழிற்பேட்டை வெற்றிகரமாக அமையும். அத்துடன் டெக்ஸ்டைல்ஸ் தொடா்புடைய சைஸிங், பிரின்டிங், காா்மெண்ட் போன்ற தொழில்களை செய்யக்கூடிய சிறு ஜவுளி பூங்காவாக அமைக்கவும், இடம் பெறுவதற்கும் நகரில் உள்ள தொழிலதிபா்கள் தயாராக உள்ளனா்.
இதன்மூலம் குருக்கள்பட்டி தொழிற்பேட்டை ஜவுளி பூங்காவாக மாறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, நகரச் செயலா் மு.பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.