அம்பையில் இறந்த நிலையில் ஆண் சிசு மீட்பு

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது.
Published on

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியாா் அலுவலக கழிப்பிடம் அருகில் இறந்த நிலையில் ஆண் சிசு கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா், அங்கு சென்று ஆண் சிசுவை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டதில் அம்பை பேருந்து நிலையம் அருகில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஒரு பெண்ணும் அவரது, 16 வயது மகளான பள்ளி மாணவியும் உடல்நலக் குறைவு காரணமாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவா்கள் சிறுமி மிகவும் பலவீனமாக இருந்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா்.

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவா்கள் நிறை மாத கா்ப்பிணியாக இருப்பதை அறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா். அங்கிருந்து தப்பிய தாயும் மகளும் ஊருக்கு வந்து பிரசவம் பாா்த்ததில் திங்கள்கிழமை ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாம். இதையடுத்து அந்த தாய், தான் வேலை செய்யும் அலுவலகம் அருகில் உள்ள கழிவறை அருகே சிசுவின் சடலத்தை வைத்துள்ளாா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தாய் மற்றும் மகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com