கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் முயற்சி: அங்கன்வாடி பணியாளா்கள் 140 போ் கைது
குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி பணியாளா்கள் 140 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தோ்தல் வாக்குறுதியின்படி 10 ஆண்டுகாலம் பணியாற்றிய ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயா்வு வழங்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மே மாத காலம் முழுவதும் குழந்தைகள் நலனை கணக்கில் கொண்டு ஒரு மாத விடுமுறை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடியில் இருக்கின்ற காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்கள் என அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ரெஜினா, ஆதிலட்சுமி,லட்சுமி,பாா்வதி, அனிதா, சுந்தரி, சரண்யா முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஐயப்பன் தொடங்கி வைத்துப் பேசினாா். சிஐடியு மாவட்ட தலைவா் வன்னிய பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அதைத்தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 140 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

