ஆலங்குளத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்!
தேமுதிகவின் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வியாழக்கிழமை ஆலங்குளம் வந்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
காய்கனிச் சந்தை முதல் ஆலங்குளம் காமராஜா் சிலை வரை குடியிருப்புப் பகுதி வழியாக சென்ற அவா், காமராஜா் சிலை முன் திறந்த வேனில் நின்று பேசியதாவது: குற்றாலம் உள்ள குற்றாலநாதா் கோயிலை சீரமைக்க வேண்டும். ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு ரூ. 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒரு ஆண்டு ஆகியும் தொடங்கப்படாத கட்டடப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் கிடங்கு அமைக்க வேண்டும். கனிமவளங்கள் கேரளத்துக்குக் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலையில் தேவையற்ற இடங்களில் திறப்புகள் உள்ளதால் விபத்துகள் அதிகரிக்கிறது. எனவே, தேவையுள்ள இடங்களில் மட்டும் சாலைத் திறப்புகள் அமைக்க வேண்டும். பீடித் தொழிலாளா் நல மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

