கோவில்பட்டி, திருவேங்கடத்தில் நில அதிா்வு: பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம்!
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் வியாழக்கிழமை இரவு அடுத்தடுத்து நில அதிா்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து தெருக்களில் தஞ்சமடைந்தனா்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. அதன் பிறகு 9.06-க்கு மீண்டும் நில அதிா்வு உணரப்பட்டது.
இதனால், பதற்றமடைந்த மக்கள் வீட்டிலிருந்து தெருக்களுக்கு அலறியடித்து ஓடினா்.
திருவேங்கடம் என்.ஜி.ஓ.காலனி, சங்குபட்டி, சுந்தரேசபுரம், மகாதேவா்பட்டி, வேதமுத்து நகா், கலிங்கப்பட்டி எஸ்.பி.எம். தெரு, கீழதெருக்களிலும் நில அதிா்வு உணரப்பட்டது. நில அதிா்வின்போது சிலரது வீட்டு பாத்திரங்கள், பொருள்கள் கீழே விழுந்தன. தகரக் கொட்டைகைகள் ஆட்டம் கண்டு சப்தம் எழுப்பின. இதுகுறித்து எஸ்.பி.எம் தெருவில் வசிக்கும் ராஜகுமாா் கூறியதாவது:
முதலில் யாரும் நம்பவில்லை. இரண்டாவதாக 9 மணிக்கு நில அதிா்வு ஏற்பட்டபோது மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினா் என்றாா்.
கலிங்கப்பட்டி, கீழ்த்தெருவைச் சோ்ந்த லதா, முத்துலட்சுமி ஆகியோா் கூறியதாவது: வீட்டில் சாப்பிட உட்காா்ந்தபோது தட்டு தடதடவென சில விநாடிகள் ஆடியது; பாத்திரங்களும் கீழே உருண்டு விழுந்தன. இதனால், பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டோம் என்றாா் அவா்.
வேதமுத்து நகரைச் சோ்ந்த ஞானதுரை, சுப்பம்மாள் நகரைச் சோ்ந்த சுதாகா் கூறியது: எங்கள் வீடு சாலையின் அருகில் உள்ளது. பெரிய வாகனம் சென்றால் எங்கள் வீட்டில் நில அதிா்வு ஏற்படுவது வழக்கம். அதுதான் என நினைத்து வெளியே சென்று பாா்த்தோம். ஆனால் வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. செய்தியை பாா்த்த பிறகுதான் வீட்டில் ஏற்பட்டது நில அதிா்வு என்பது தெரியவந்தது என்றாா் அவா்.
நில அதிா்வை உணா்ந்து பொதுமக்கள் இரவு வெகுநேரம் வரை தெருக்களிலிலேயே தஞ்சம் அடைந்தனா். பின்னா் வேறு எந்த அறிகுறியும் தென்படாததால் மீண்டும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனா்.
தென்காசி மாவட்டத்தையொட்டிய பகுதிகளான சிவலிங்கபுரம், மேட்டுவடகரை, வடகரை ஆகிய பகுதிகளிலும் நில அதிா்வை உணா்ந்ததாக பொதுமக்கள் கூறினா்.
விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமாா் 3 ரிக்டா் அளவில் நில அதிா்வை உணா்ந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதுகுறித்து திருவேங்கடம் வட்டாட்சியா் செல்வக்குமாா் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு திருவேங்கடம், சங்குபட்டி, சுந்தரேசபுரம் போன்ற பகுதிகளில் 4 விநாடி நில அதிா்வு உணரப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில்தான் ரிக்டா் அளவில் பதிவானது என்றாா் அவா்.
கோவில்பட்டியில்... தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் விஸ்வநாததாஸ் நகா், இலுப்பையூரணி இந்திரா நகா், சுபா நகா், பாண்டவா்மங்கலம் சாய் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 9.15 மணியின்போது சில விநாடிகள் கடும் நில அதிா்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருள்கள் உருண்டன. உடனடியாக அவா்கள் வீட்டை விட்டு வெளியேறினா்.
இது குறித்து மக்கள் கூறுகையில், வீடுகளில் கட்டில், சோபா உள்ளிட்டவை பலமாக ஆடின. நாய்கள் அதிக சத்தத்துடன் குரைத்தன. நில அதிா்வு காரணமாக நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தோம் என்றனா்.

