பிச்சாட்டூா் அணையில் இருந்து உபரி நீா் திறப்பு: ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கால் தரைப்பாலங்கள் சேதம்
திருவள்ளூா்: ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் பிச்சாட்டூா் அணை நீா் நிரம்பி 2,000 கன அடி உபரி நீா் திறந்துவிட்டதால், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ஃபென்ஜால் புயலால் ஆந்திர மாநிலத்திலும் மழை பெய்தது. இந்த மழையால் பிச்சாட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை இடையே செல்லும் ஆரணி ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டது.
இதனால், முதல்கட்டமாக 500 கன அடி முதல் 2,700 கன அடியாக உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அஞ்சாத்தம்மன் பேருந்து நிறுத்தம் முதல் புதுப்பாளையம் செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உடைந்து சேதமானது.
இதேபோல், ஆரணி சமுதாயக் கூடம் அருகே மங்களம் கிராமத்துக்குச் செல்லும் தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்துச் செல்கிறது.