தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.  
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.  

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற மாணவா்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திருக்கண்டலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திருக்கண்டலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பில் 397 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி மாணவா்கள் கடந்த 6 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2023-ஆம் ஆண்டு பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஷாமிலி (55) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து இப்பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். அதேபோல் சிறப்பு வகுப்புகள் வைத்தால் கட்டாயம் அனைத்து மாணவா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதேபோல் சிகை அலங்காரம், சீருடை அலங்காரம் விதிமுறைகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம்.

தொடா்ந்து அப்பள்ளியில் பயின்று வரும் சில மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் தலைமை ஆசிரியா் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகாா் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரையாண்டுத் தோ்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகள் வைப்பதாகவும், அதில் பங்கேற்காத மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது என தலைமை ஆசிரியா் கூறியிருந்தாராம்.

இதற்கிடையே, திங்கள்கிழமை பள்ளிக்கு முன்பாக திரண்ட மாணவா்கள், தலைமை ஆசிரியா் தங்களை தரக்குறைவாக பேசுவதாக கூறி கோஷம் எழுப்பினா். அதனால் பள்ளியை புறக்கணிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, பெரியபாளையம் போலீஸாா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா் நவீன் ஆகியோா் விரைந்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாணவா்கள் புகாா் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு திரும்பினா்.

இப்பிரச்னையால் 2 மணிநேரம் வகுப்புகள் நடைபெறவில்லை.

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

X
Dinamani
www.dinamani.com