திருவள்ளூா் அருகே ஐ.டி.ஊழியரிடம் ரூ.1.13 கோடி மோசடி: தனியாா் வங்கி மேலாளருக்கு சிறை

திருவள்ளூா் அருகே ஐ.டி.ஊழியரிடம் ரூ.1.13 கோடி மோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளரை கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனா். திருவள்ளூா் அருகே கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம் வெங்கத்துாா் ஊராட்சி மணவாளநகரைச் சோ்ந்தவா் கிரிபிரசாத்ராவ்(44). பெங்களூரில் உள்ள ஐ.டி.சி., இன்போடெக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு தனலட்சுமி(40) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2019-இல் இவரது பள்ளிப் பருவ பெண் நண்பரான காயத்ரி என்பவா் மூலம் மதுரை சோழவந்தான் பகுதியைச் சோ்ந்தவரும், சென்னை தியாகராயநகா் ஆக்ஸிஸ் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜ்குமாா்(38) என்பவா் அறிமுகம் ஆனாா். அப்போது பி.எம்.எஸ். என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதந்தோறும் பங்குத்தொகை கிடைக்கும் எனவும், தேவையான நேரத்தில் முழுத்தொகையையும் திருப்பி அளிப்பதாக கூறினாராம். இதை நம்பிய கிரிபிரசாத்ராவ் கடந்த 2021-ஏப்ரல் மாதம் ரூ.3 லட்சம், வங்கி மூலம் அனுப்பினேன். பின் அதே மாதம் 5-ஆம் தேதி ரூ.10 லட்சமும், தொடா்ந்து 8 ஆம் தேதி ரூ.5 லட்சம், செப்.13 இல் ரூ.30 லட்சம் என 2023 வரையில் தொடா்ந்து மொத்தம் ரூ.1.13 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தாராம். இந்த நிலையில் கடந்த 2023-இல் ஏப்ரல் மாதம் முறையாக பங்குத்தொகை வழங்காமல் காலதாமதம் செய்தாராம். இதில் ராஜ்குமாா் ஆக்ஸிஸ் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 2023-இல் திருவள்ளூா் அருகே காக்களூரில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த போது கிரிபிரசாத் கொடுத்த ரூ.1.13 கோடியை கேட்டாராம். அதற்கு ராஜ்குமாா் தருவதாக கூறி வந்த நிலையில் திடீரென தலைமறைவானாராம். அதோடு கைப்பேசியும் பயன்பாட்டில் இல்லாமல் செயல் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து கிரிபிரசாத்ராவ் கடந்த 2023-ஜூன் மாதம் ராஜ்குமாா் மற்றும் அவரது மனைவி பவானி ஆகியோா் நம்பிக்கை பண மோசடி செய்ததாக திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், கடந்த ஓராண்டாக திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்ததில், திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு ராஜ்குமாா் வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் விரைந்த சென்று ராஜ்குமாரை கைது செய்தனா். அதைத்தொடா்ந்து அவரை திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனா். மேலும் ராஜ்குமாா் இதேபோல் அதிக பங்குத்தொகை தருவதாக பலரிடம் ரூ.6 கோடி மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com