காவலாளி அடித்துக் கொலை: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது

பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் இறால் பண்ணையில் வேலைக்குச் சென்ற காவலாளியை அடித்துக் கொலை
Published on

பொன்னேரி: பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் இறால் பண்ணையில் வேலைக்குச் சென்ற காவலாளியை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், காட்டூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாங்கல்பெரும்புலம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவராஜ் (45). இவரது மனைவி பவானி, மகன்கள் உள்ளனா்.

இவா் தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு வேலைக்குச் சென்ற சிவராஜ் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, சிவராஜை அவரின் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் எங்கேயும் கிடைக்காத நிலையில், அவரின் மனைவி பவானி காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், அதே இறால் பண்ணையில் வேலை செய்து வந்த 2 பேரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.

அதில், அவா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தேவபிரசாத் (19), குத்தம்தாஸ் (42) என்பது தெரியவந்தது.

இருவா்கள் இருவருக்கும் சிவராஜுடன் ஏற்பட்ட தகராறில் அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரின் உடலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அத்துடன் அவா்கள் மறைத்து வைத்திருந்த சிவராஜின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com