திருவள்ளூா்: 526 ஊராட்சிகளில் நவ. 23-இல் கிராம சபைக் கூட்டம்

நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது வரும் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி ஒத்தி வைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் 526 ஊராட்சிகளிலும் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி, கடந்த 1-ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல் , மகளிா் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், இதர பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

அதனால், கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கலந்து கொள்வது கடமையாகும். மேலும், கிராம சபைக் கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தோ்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com