பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் கல்வி உதவித்தொகை பெற...
திருவள்ளூா்: மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில்வோா் நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு புதுப்பித்தலுக்கு டிச. 15 மற்றும் புதியது ஜன.15-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தொழில் கல்வி மற்றும் மத்திய பல்கலை.களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இவா்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகள் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணவரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வி உதவித் தொகைக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-5, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.