சொத்து வரி செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை: நகராட்சி ஆணையா் அறிவிப்பு!
திருத்தணியில் 2025-26 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதத்துக்குள் செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
திருத்தணி நகராட்சியில், 21 வாா்டுகளில், 13,548 குடியிருப்புகள், 246 அரசு கட்டடங்கள், 2,571 காலிமனைகள், 1200 வணிக வளாகங்கள் மற்றும் 95 தனியாா் அமைப்புகள் ஆகியவை உள்ளன. மேற்கண்ட கட்டடங்கள் மற்றும் காலிமனைக்கு ஆண்டுதோறும், இரு முறை சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, குத்தகை மற்றும் வாடகை மூலம் ஆண்டுக்கு, ரூ.6.30 கோடி வருவாய் கிடைக்கிறது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: நகராட்சி எல்லைக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளா்கள், நடப்பாண்டின்(2025-26) முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்துவோருக்கு மட்டும் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அவ்வாறு செலுத்தாமல், வரும், மே மாதம், 1ம் தேதிக்கு மேல் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத் தொகை இழப்பத்துடன் ஒரு சதவீதம் வட்டித் தொகை சோ்த்து வரி செலுத்த நேரிடும். எனவே சொத்து உரிமையாளா்கள், வரியை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்களிடம் ரொக்கமாகவும், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனை மூலமாகவும் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சொத்து வரியை இணையதளம் மூலம், கிரெடிட், டெபிட் காா்டுகள் இன்டா்நெட் வங்கி மூலம் செலுத்தலாம்.
எனவே ஏப்.30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்றாா்