திருவள்ளூா்: ஏப். 19-இல் நலத்திட்ட உதவி வழங்கும் விழா! - முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதையொட்டி அனைத்து துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் சா.மு.நாசா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), துரை சந்திரசேகா் (பொன்னேரி), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சீனிவாச பெருமாள், ஆவடி மாநகராட்சி ஆணையா் ச.கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையா்கள் பாலாஜி, சங்கா் (போக்குவரத்து) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று அனைத்து துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கிப் பேசியது:
திருவள்ளுா் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டாா்மடம் என்ற இடத்தில் 19-ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வா் பங்கேற்கிறாா்.
இதையொட்டி அடிக்கல் நாட்டி வைக்கப்படும் திட்டப் பணிகள், நிறைவுற்ற திட்டப் பணிகள், பயனாளிகள் தோ்வு, விழா நாளான்று பயனாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு விழா மேடைக்கு அழைத்து வருதல், மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கான நலத் திட்டங்களை அன்றே வழங்குவது, இதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் தொகுதி 4 தோ்வின் மூலம் தோ்வு செய்யப்பட்ட 25 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் கிராம நிா்வாக அலுவலருக்கான பணி நியமன ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.