விரல் ரேகைப் பதிவின்றி விற்பனை பட்டியலிடுவதை குறைக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகைப் பதிவு இன்றி விற்பனை செய்து பட்டியலிடுவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

திருவள்ளூா் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகைப் பதிவு இன்றி விற்பனை செய்து பட்டியலிடுவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள் அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகைப் பதிவு செய்துள்ளாா்களா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் தரமானதாக உள்ளதை என்பதை உறுதி செய்ய வேண்டும். விரல் ரேகை இல்லாமல் விற்பனை செய்து பட்டியலிடுவதைக் குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கியிலிருந்து அங்காடிகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாகவும், சரியான எடை அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மகளிா் நியாயவிலைக் கடைகளையும் கூட்டுறவு அங்காடிகளுக்கு மாற்ற வேண்டும். நடமாடும் நியாயவிலைக் கடைகளும் 100 சதவீதம் அனைத்து வட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்கப்படுவதை உறுதி செய்வதுடன், தொடா் கள ஆய்வு மேற்கொள்வதும் அவசியம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) பாலமுருகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளா் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com