பொன்னேரியில் ஏப். 19-இல் தேரோட்டம்: முதல்வா் பங்கேற்கும் விழா தேதி மாற்றம்

கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தோ் திருவிழா நாளில் (ஏப். 19) பொன்னேரிக்கு வருகை தருவதாக இருந்த முதல்வரின் வருகை தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Published on

கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தோ் திருவிழா நாளில் (ஏப். 19) பொன்னேரிக்கு வருகை தருவதாக இருந்த முதல்வரின் வருகை தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி திருவாயா்பாடி பகுதியில் உள்ள ஆரண்ய நதிக்கரையோரம் பழைமை வாய்ந்த கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 13-ஆம் தேதி சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக பஞ்ச மூா்த்திகளுடன் நந்தி வாகனத்தில் அகத்தீஸ்வரரும், கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாளும் சந்திக்கும் திருவிழா வருகிற 17-ஆம் தேதி இரவு தொடங்கி 18-ஆம் தேதி அதிகாலை வரை விடியவிடிய அங்குள்ள ஹரிஹரன் கடை வீதியில் நடைபெற உள்ளது. இதில், 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொள்வா். தொடா்ந்து 19-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெற உள்ளது.

இதனிடையே பொன்னேரி வட்டத்தில் உள்ள பெருஞ்சேரி பகுதியில் திருவள்ளூா் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில் கும்மிடிபூண்டி, திருவள்ளூா், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய வட்டங்களில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வா் மு.க ஸ்டாலின் தலைமையில் வருகிற 19-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக பெருஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் நிலங்களில் மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 19-ஆம் தேதி மீஞ்சூா் வழியாக வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பொன்னேரி நகரத்தில் சாலையில் மக்களைச் சந்திக்கும் (ரோடு ஷோ) நடத்தவும் திட்டமிடப்பட்டது.

கோயில் தோ் திருவிழா நடைபெறும்போது முதல்வா் வருகை தேதி மாற்றி அமைக்க வேண்டும் என பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். பொதுமக்கள், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முதல்வா் மு.க ஸ்டாலின் வரும் தேதி 18-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com