தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது
திருவள்ளூா் அருகே ரயில் தண்டவாளத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடவம் மீட்கப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்து வீசியதாக தெரியவந்ததை அடுத்து பெண் உள்பட 4 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அடுத்த புட்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அரவிந்த் (எ)மேத்யூ (29). இவரது மனைவி ஜான்சி. இவா்களுக்கு சாரிகா என 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் அரவிந்தன் (எ)மேத்யூ காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து லாரிகளில் மதுபானங்களை ஏற்றி கொண்டு செல்லும் வேலை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் வேலையை முடித்துக்கொண்டு கடந்த ஜூன் 19-ஆம் தேதி வீட்டுக்கு சென்ற அரவிந்த் புட்லூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். அப்போது விரைவு ரயிலில் அடிபட்டு இறந்ததாக கிடைத்த தகவலையடுத்து திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் மகன் சாவில் மா்மம் உள்ளதாக பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே பிரேதப் பரிசோதனையில் அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது உறுதியானாதால் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அரவிந்த் மேத்யூ அதே புட்லூா் பகுதியைச் சோ்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் தகாத உறவு விவகாரத்தில் கூலிப்படையை வைத்து அவரை வெட்டிக் கொலை செய்ததும், உஷா உள்ளிட்டோா்தான் என உறுதியானது.
இதயைடுத்து இந்த வழக்கில் தொடா்புடைய உஷா (29), பால்ராஜ் (40), ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த ஜெய்சந்த்(19), அதே பகுதியைச் சோ்ந்த விஷ்வா(19) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டு ரயில் மோதி இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.