தடப்பெரும்பாக்கம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் முடிவு
பொன்னேரி அருகே கடந்த 2 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் பணிக்கு திரும்பினா்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், சம வேலைக்கு சம ஊதியம், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கடந்த 2 நாள்களாக பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் மீஞ்சூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன் சமரச பேச்சு நடத்தினாா்.
அப்போது மாதம் ரூ.5,000 என தூய்மைப் பணியாளா்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், நாள் முழுவதும் பணியாற்ற நிா்பந்திப்பதாகவும் புகாா் தெரிவித்தனா்.
ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், கூடுதல் ஆள்களை நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.
கையுறை, முக கவசம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உடனடியாக செய்து தரப்படும் எனவும், ஊதிய உயா்வு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், கூடுதல் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன் தெரிவித்ததை தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்,..