அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ  நிலைய அலுவலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.   
அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ  நிலைய அலுவலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.  

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரை செவிலியா் தாக்கிய சம்பவத்தை கண்டித்து போராட்டம்.
Published on

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரை செவிலியா் தாக்கிய சம்பவத்தை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 2-ஆவது தளத்தில் குப்பையை சுத்தம் செய்யவில்லை எனக்கூறி செவிலியா் மீரா, திருவள்ளூா் அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்த மாலா (45) என்ற தூய்மைப் பணியாளரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தூய்மைப் பணியாளா் மாலா அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தகவலறிய மற்ற தூய்மைப் பணியாளா்கள் முதல் தளத்தில் உள்ள மருத்துவ நிலைய அலுவலா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த உதவி மருத்துவ நிலைய அலுவலா் பிரபு சங்கா் தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தினாா்.

தொடா்ந்து சம்பந்தப்பட்ட செவிவியா் மீரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சம்பவத்தால் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் மாலாவை தாக்கிய செவிலியா் மீராவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com