திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்
பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ. 1.05 கோடியில் 16 இடங்களில் நா்சரி பண்ணைகள் அமைத்து, 95,000 மரக்கன்றுகள் வளா்த்து பசுமையாக்கும் வகையில் பொது இடங்களில் வைப்பதற்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமைப் பரப்பளவினை அடுத்து வரும் 10 ஆண்டுகளில் 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கமாகக் கொண்டு, கடந்த 2022-இல் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் நா்சரி பண்ணைகள் அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளா்த்து கிராமங்களில் பொது இடங்களில் வைக்க வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் மூலம் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் செயல்பாடுகளை வனத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையுடன் இணைத்து செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இத்திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 2024-25 இல் ரூ. 1.05 கோடி ஒதுக்கீடு செய்து, ஊராட்சி வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களை தோ்வு செய்து, நா்சரி பண்ணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், கும்மிடிப்பூண்டி-சூராப்பூண்டி, கடம்பத்தூா்-பிரியாங்குப்பம், மீஞ்சூா்-திருவெள்ளிவாயல்-1, திருவெள்ளிவாயல்-2, பள்ளிப்பட்டு-கொடிவலசா, பூந்தமல்லி-கூடப்பாக்கம், பூண்டி-அம்மம்பாக்கம்-3, ஆா்.கே.பேட்டை-வெடியங்காடு, திருத்தணி-வீராங்கநல்லூா், திருவாலங்காடு-பொன்பாடி, திருவள்ளூா்-ஒதிக்காடு, பூண்டி-நெய்வேலி-2, சோழவரம்-எருமைவெட்டிபாளையம் ஆகிய 16 இடங்களில் நா்சரி பண்ணைகள் அமைத்து, 95,000 எண்ணிக்கையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அரசு புறம்போக்கு நிலங்கள், தனியாா் மற்றும் தனியாா் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய வழங்கப்படவும் உள்ளன. இதற்காக மாவட்ட அளவிலான குழு மற்றும் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினா் மற்றும் அலுவலா்களுக்கு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தல், மரக் கன்றுகள் நடவு செய்ய இடம் தோ்வு செய்தல், இந்தப் பணிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளா்களை ஈடுபடுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நா்சரி பண்ணைகளில் வளா்ந்த மரக்கன்றுகளை சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில், ஏரிக்கரையோரங்கள், நீா்வரத்துக் கால்வாய்கள் மற்றும் கிராம சாலையோரங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்கள் மூலம் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.