பழங்குடியினருக்கு தன்சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு
திருவள்ளூா் அருகே ஸ்ரீபெரும்புதூா் இளைஞா் மேம்பாட்டுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிா்வாக சமூகப்பணித் துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாணவ, மாணவிகள் பழங்குடியினருக்கு தன்சுத்தம், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து பிரசாரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், திம்மபூபாலபுரம் கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளைஞா் மேம்பாட்டுக்கான ராஜீவ் காந்தி தேசிய நிா்வாகம் சமூகப்பணி துறை மற்றும் ஒருங்கிணைந்த கிராம சமுதாய வளா்ச்சி நிறுவனம்(ஐ.ஆா்.சி.டி.எஸ்.) இணைந்து 6 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமின் நோக்கம், முதுகலை சமூகப்பணி மாணவா்களுக்கு கிராம மற்றும் பழங்குடியினா் சமூகத்துடன் நேரடி தொடா்பு கொண்டு, புறக்கணிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுத் தேவைகளை அறிந்து செயல்படுவதற்கான பயிற்சியை வழங்குவதாகும். அந்த வகையில், 28 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று, உள்ளூா் மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில், நாள்தோறும் சமூகப் பாதுகாப்பு, பெற்றோருக்கான குழந்தை உரிமைகள், தன் சுத்தம், சுகாதாரம், குழந்தைகளின் கல்வி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதேபோல், பள்ளி மாணவா்களுக்கு சுய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து, திம்மபூபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுவா் ஓவியம் வரையப்பட்டு, கல்வி கற்கும் நல்ல சூழலை உருவாக்குதல் மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நிறைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூா் ரோட்டரி கிளப் சாா்பில், 50-க்கும் மேற்பட்ட இருளா் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி தொகுப்புகள் வழங்கப்பட்டன.