சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போதைய நிலையில் இச்சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி, பழுதாகும் நிலை உள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து மிகவும் அவல நிலையில் காணப்படுகிறது.
சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சாலையை சீரமைப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூா்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பத்தூா் போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். போராட்டத்தினால் கடம்பத்தூா்-பேரம்பாக்கம் சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.