6 தொழில் பிரிவுகளுடன் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பயன்பாட்டிற்கு ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததோடு மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகளையும் வழங்கினா்.
சட்டப்பேரவை அறிவிப்பின்படி,, இந்த 19 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
அதைத்தொடா்ந்து திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம், சண்முக பத்மாவதிபுரம் பகுதியில் தற்காலிக கட்டடத்தில் புதிதாக செயல்படவுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி ஏற்றி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். பின்னா் பல்வேறு தொழிற்பயிற்சிகளில் சோ்ந்த மாணவிகள் 44 பேருக்கு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினா்.
இதுகுறித்து ஆட்சியா் மு.பிரதாப் கூறியதாவது: இத்தொழில் பயிற்சி நிலையம் ஆண்டுக்கு சுமாா் 172 மாணவா்கள் பயன்பெறும் வகையில் 4 தொழில் பிரிவுகள் இரண்டு ஆண்டுகளும், 2 தொழில் பிரிவுகள் ஓராண்டு தொழில் பிரிவுகள் என 6 பிரிவுகளுடன் செயல்பட உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சோ்க்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியாா் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் உடனே பணிவாய்ப்பும் உள்ளது.
மேலும் தொழில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவா்கள் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சியும் பெறுவதன் மூலம் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழும் கிடைக்கிறது. இந்த இரு சான்றிதழ்களும் நல்ல வேலை வாய்ப்பு பெறுவதற்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னிலையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் உள்ளது.
ஆகவே 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி உடைய 14 முதல் 40 வயது வரை உள்ள இருபாலரும் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது.
இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெவோருக்கு அரசு வழங்கும் சலுகைகளாக மாத உதவித்தொகை ரூ.750, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, மேலும் கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தின் மூலமாக ஐடிஐ பயிற்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.3000 உதவித் தொகையும் வழங்கயுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் திறன் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநரும், தொழிற்பயிற்சி நிலைய முதல்வருமான சித்ரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவன், வட்டாட்சியா் ரஜினிகாந்த் உள்ளிட்ட அந்த துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.