தொண்டையில் வண்டு சிக்கி பெண் குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வண்டை பிடித்து விழுங்கிய பெண் குழந்தை மூச்சுக் குழாயில் கடித்தால் உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக். இவா் கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றாா்.
இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு குகஸ்ரீ(1) விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, தாயாா் நொறுக்கி தீனியை நீரில் நனைத்து ஊட்டினாராம். சிறிது நேரத்தில் குழந்தை மூச்சுத் திணறி அலறி துடித்துள்ளது. அதைத் தொடா்ந்து அப்பகுதியில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
தொடக்கத்தில் குழந்தை முறுக்கு சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பெற்றோா் கருதிய நிலையில், பிரேத பரிசோதனை செய்த போது மூச்சுக் குழாயில் வண்டு கடித்திருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கி மூச்சுக்குழாயில் கடித்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.