முருகன் கோயிலில் ஓரே நாளில் கூண்டில் சிக்கிய 20 குரங்குகள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சுற்றித் திரிந்த 20 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா் பாதுகாப்பாக வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும், ஆயிரக்கண க்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மலைக்கோவிலில், 70 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதில் பக்தா்கள் பூஜை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் கொண்டு செல்லும் போது, குரங்குகள், உடைந்த தேங்காய் மற்றும் வாழைப் பழங்களை வழிமறித்து பறித்து செல்கின்றன. வாழைப்பழங்களை கொடுக்க மறுக்கும் பக்தா்களை கடித்து வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 30 க்கும் மேற்பட்ட பக்தா்களை குரங்குகள் கடித்துள்ளன. இது குறித்து கோயில் இணை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.
இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் ஒன்றிணைந்து மலைக்கோயிலில் குரங்குகள் அதிகளவில் உலா வரும் இடத்தில் கூண்டு வைத்து பிடித்தனா்.
திங்கள்கிழமை ஒரே நாளில், 20 குரங்குகளை பிடித்து, வனத்துறையினா் பாதுகாப்பாக ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.