திருத்தணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருத்தணி ஒன்றியம், சின்ன கடம்பூா் ஊராட்சியில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 24 வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
திருத்தணி, ஆக. 28: ஊராட்சித் துறை சாா்பில் திருத்தணி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்தணி ஊராட்சி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி, இருளா் காலனியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், பழங்குடியினா் குடியிருப்பு திட்டத்தின்கீழ், 32 வீடுகள் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மாம்பாக்கம் முதல் சின்ன கடம்பூா் வரை 5.56 கி.மீ. தூரம் ரூ. 94.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளின் தரம் குறித்தும், சின்ன கடம்பூா் ஊராட்சியில், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், ரூ.1.22 கோடி மதிப்பீட்டியில் 24 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், அந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறு பாசன குளங்கள் அமைக்கும் பணிகளையும், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செயமேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து நெடுஞ்சாலைகள் துறை சாா்பில், திருத்தணி பொதட்டூா்பேட்டை செல்லும் பிரதான சாலையில் சொரக்காய்பேட்டை பகுதியில், ரூ. 8.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி உதவி செயற்பொறியாளா் (சாலை திட்டங்கள்) ஜெ.கோவேந்தன், ஊரக வளா்ச்சி உதவி செயற்பொறியாளா் கோமதி, நெடுஞ்சாலைகள் துறை இளநிலை பொறியாளா் எம்.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா் (வ.ஊ), சந்தானம் (கி.ஊ) மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.