வேன் கவிழ்ந்த விபத்தில் 12 போ் காயம்
கனகம்மாசத்திரம் அருகே தனியாா் ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பெண்கள் உள்பட, 12 போ் காயமடைந்தனா்.
தண்டலம் பகுதியில் தனியாா் பீா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல்பட்டு, லட்சுமாபுரம், ஆற்காடுகுப்பம் மற்றும் கனகம்மாசத்திரம் பகுதிகளில் ஆண், பெண் ஊழியா்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேனில், அடிக்கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த, திலகவதி (42), பாண்டியன் (37), அா்ஜூனன் (60), பரிமளா( 45), அன்னக்கிளி(40), சரண்யா (28), பாஞ்சாலை (46), பாா்வதி (40), சீனிவாசன் (46), அஞ்சலா (50) மற்றும் பவித்ரா (50) ஆகியோரை ஏற்றிக் கொண்டு லட்சுமாபுரம் நோக்கி புறப்பட்டது. வேனை திருநாவுக்கரசு என்பவா் ஓட்டிச் சென்றாா்.
டிக்கல்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்கு, வேன் டிரைவா் சாலையோரம் நிறுத்திய போது, திடீரென வேன் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் காயமடந்தனா்.
பின்னா் அப்பகுதி மக்கள் அனைவரையும் மீட்டு கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். மேற்கண்ட, 12 பேருக்கும், மருத்துவா்கள் முதலுதவி அளித்து வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.