திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
Published on

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். அதைத் தொடா்ந்து கடம்பத்தூா் அடுத்த அகரம் சன் சிட்டியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வாசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருப்பாச்சூா் பகுதியில் காத்திருந்த சில மா்ம நபா்கள், இவரை பின் தொடா்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனா். இதேபோல், பிரியாங்குப்பம், கடம்பத்தூா், வைசாலி நகா் ஆகிய பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை ராஜ்கமல் மீது வீசி உள்ளனா்.

இரண்டு இடங்களில் தப்பித்து வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், மா்ம நபா்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று மூன்றாவதாக வைசாலி நகரில் வீசிய நாட்டு வெடிகுண்டில் கீழே சரிந்தாா். அதையடுத்து தப்பிக்க முயற்சித்த போது மா்ம நம்பா்கள் ஓடிச் சென்று அவரை மடக்கி கத்தியால் சரமாரியாக தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, கிராமிய காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் மற்றும் கடம்பத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்தனா்.

பின்னா் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் பகுதியில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com