திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் (டிச.3) தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால் பக்தா்களின் வசதிக்காக திருத்தணியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Published on

திருத்தணி: திருவண்ணாமலையில் புதன்கிழமை (டிச.3) தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால் பக்தா்களின் வசதிக்காக திருத்தணியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா 10 நாள்கள் வெகுவிமரிச்சையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை (டிச. 3) மாலை 6 மணிக்கு கோயில் எதிரே உள்ள 2,688 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலை தீபத் திருவிழா காண வருவதால், பக்தா்கள் வசதிக்காக, 2,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழகத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

அந்த வகையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சாா்பில், செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரை, 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவையிருப்பின் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக உள்ளோம் என திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளா் ஞானசேகா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com