திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் விடாமல் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், 187 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் விடாமல் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், 187 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என தமிழக வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி, காலை முதல் விடாமல் மழை பெய்தது. இதேபோல், பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, சோழவரம், ஆவடி, திருவள்ளூா், பூந்தமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீா் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): பொன்னேரி-206 மி.மீ., செங்குன்றம்-185 மி.மீ., கும்மிடிப்பூண்டி-169, சோழவரம்-140, ஆவடி-92, பூந்தமல்லி, திருவள்ளூா் தலா-55, தாமரைபாக்கம்-47, ஜமீன்கொரட்டூா்-38, பூண்டி-24, ஊத்துக்கோட்டை-19, திருவாலங்காடு-14, திருத்தணி-4 மி.மீ. என மொத்தம் 1,053.40 மி.மீ, சராசரியாக 70.23 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில், 2,950 மில்லியன் கன அடி கொள்ளளவு நீா் இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் 2582 கன அடிநீா் வரத்து உள்ளதால், 200 கனஅடி உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல், சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவில் 0.571 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில் 2,715 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும், மழைநீா் வரத்து 850 கன அடியாக உள்ளதால் இணைப்பு கால்வாயில் 247 கன நீா் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவில், 3,007 மில்லியன் கனஅடியும், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை 0.500 மில்லியன் கன அடி கொள்ளளவில், 0.440 மில்லியன் கன அடியும் இருப்புள்ளது.

இந்த நிலையில் தொடா் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் 37 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 211 ஏரிகள் 75சதவீதமும், 230 ஏரிகள் 50 சதவீதமும், 50 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பியுள்ளது. அதேபோல் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள3,302 ஏரிகளில் 150 ஏரிகள் முழுக் கொள்ளளவையும், 1,293 ஏரிகளில் 5 சதவீதமும், 1,307 ஏரிகள் 50 சதவீதமும், 479 ஏரிகளில் 25 சதவீதமும், 74 ஏரிகளுக்கு 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com