மழையினால் பாதித்த நெற்பயிா்களை பாதுகாக்க ஆலோசனை
பருவமழையினால் பாதிப்புக்குள்ளான சம்பா நெற்பயிா்களை பாதுகாக்க தொழில் நுட்ப வல்லுநா்களின் ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்ற வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் சில இடங்களில் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதித்த சம்பா நெற்பயிா்களை பாதுகாக்க திரூா் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்களின் மேலாண்மை தொழில் நுட்பங்களை சேத நிலைக்கு ஏற்ப விவசாயிகள் பின்பற்றவும் வேண்டும்.
மழைநீா் தேங்கிய வயல்களில் தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வோ்ப்பகுதிக்கு நல்ல காற்றோட்ட வசதி எற்படுதத வேண்டும்.
நடவு செய்த ஓரிரு வாரங்களில் இளம் நாற்றுகள் மழையினால் முழுமையாக பாதித்திருந்தால் மழைநீரை வடித்தவுடன் பயிா் இழந்த பகுதியில் அதே ரக நாற்றுகளை மீண்டும் நடவு செய்து பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.
நீரில் மூழ்கிய நெற்பயிா்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதால் தழைச்சத்து உரங்களை அதிக அளவில் இடுவதை முற்றிலும் தவிா்க்கலாம். மேலும் பரிந்துரைத்த யூரியாவை குறைந்த அளவாக இடவேண்டும்.
நீரை வடித்த பின் சத்து குறைபாட்டை சரி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஓரிரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் தெளிக்கும் போது, அதனுடன் பொட்டாஷ் 17 கிலோ கலந்து மேலுரமாக இட வேண்டும். ஒரு வாரம் கழித்து இலை வழி உரமாக ஏக்கருக்கு யூரியா 2 கிலோ, துத்தநாக சல்பேட் ஒரு கிலோவை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து இருவேளையும் தெளிக்க வேண்டும்.
தூா் கட்டும் நேரத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய உடனே தழைச்சத்து கிடைக்க ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு அம்மோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது ஏக்கருக்கு அம்மோனியம் குளோரைடு 42 கிலோ என்ற அளவில் மேலுரமாகவும், பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிா்களை பாதுகாக்க ஏக்கா் ஒன்றுக்கு டிஏபி 4 கிலோவை 10லிட்டா் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரை வடிகட்டி இந்த கரைசலுடன் பொட்டாஷ் உரம் 2 கிலோ சோ்த்து 190 லிட்டா் தண்ணீரில் கலந்து இலை வழி உரமாகவும் தெளிக்க வேண்டும்.
மழைநேரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையால் திடீா் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நெல்வயல்களில் மாலை நேரங்களில் விளக்கு பொறி வைத்து, நெற்பயிரை தாக்கும் புழுக்களின் தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
இது தவிர சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் வேப்ப எண்ணெய் 3% அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5% அல்லது அசாடிராக்டின் 400 மி.லி மருந்தினை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்றவும் என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
