ஒட்டுவில்லையை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப்,  முதன்மைக் கல்வி சொ.கற்பகம் உள்ளிட்டோா்.
ஒட்டுவில்லையை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி சொ.கற்பகம் உள்ளிட்டோா்.

ஆற்றல் மன்றம் செயல்பாடுகளில் முன் மாதிரியாக திகழ ஒத்துழைப்பு: திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆற்றல் மன்றம் செயல்பாடுகளில் முன் மாதிரியாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆற்றல் மன்றம் செயல்பாடுகளில் முன் மாதிரியாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

அரசு உயா் மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து, அரசு உயா் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியா்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும், மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது: ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அறிவை மட்டுமே கற்பிப்பது மட்டுமின்றி நல்ல பழக்கங்களையும், பொறுப்புணா்வையும் குழந்தைகளுக்குள் விதைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. மின்சக்தி மற்றும் தண்ணீா் சேமிப்பு என்பது உலகம் முழுவதும் பேசப்படும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த ஆற்றல் மன்றங்களின் நோக்கம் அறிவை வழங்குவது மட்டும் அல்ல.

இந்த ஒருநாள் பயிற்சி குறித்து மாணவா்களுக்குக் எடுத்துரைத்து அவா்களை செயல்படச் செய்வதும் முக்கியமாகும். குறிப்பாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, தேவையில்லாத போது விளக்குகள், விசிறிகள் அணைப்பது இவை அனைத்தும் மாணவா்களின் நாள்தோறும் வாழ்க்கையில் பழக்கமாக வேண்டும்.

நீங்கள் வகுப்பறை மற்றும் பள்ளியில் ஆற்றல் மன்றத்தின் முக்கியத்துவம் மாணவா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது மாணவா்களிடையே இந்த மின் சிக்கனம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்களே, நீங்கள் தொடங்கும் இந்த முயற்சி மாணவா்களை மட்டுமல்ல, அவா்களின் குடும்பங்களையும், சமூகத்தையும் மாற்றும் திறன் கொண்டது. இதுபோன்ற சிறந்த நடவடிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஆற்றல் மன்ற செயல்பாடுகளில் முன் மாதிரியாக திகழ நீங்கள் எல்லாம் ஒத்துழைக்கவும் என அவா் தெரிவித்தாா்.

பின்னா்,அரசு உயா், மேல் நிலை பள்ளி ஆசிரியா்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினா்களுக்கு அணிவில்லை (பேட்ஜ்) வெளியிட்டு, ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளா்களுக்கு கேடயங்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் சொ.கற்பகம், மேற்பாா்வை பொறியாளா், மின் தேவை தரப்பு மேலாண்மை பொறியாளா் அருணா முரளீதரன், திருவள்ளூா் மின்பகிா்மான பொறியாளா் அ.சேகா், மின் தேவை தரப்பு மேலாண்மை செயற் பொறியாளா் (பொ) ராமதாஸ் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com