திருவள்ளூரில் இடிந்து விழும் நிலையில் வட்டார கல்வி அலுவலக வளாகம்
திருவள்ளூரில் வட்டார கல்வி அலுவலகம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய கட்டடம் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ் திருள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப்புக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக(ஈக்காடு) வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 270-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிப்பதிவேடுகள், 150-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியா்களின் பணிப்பதிவேடுகள் பராமரித்து வருகின்றனா். அதோடு,11 அமைச்சு பணியாளா்களுடன் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது . மேலும், 7-க்கும் மேற்பட்ட கணிப்பொறி, நகல் பிரதிகள் இயந்திரம் மற்றும் பழைய கோப்புகளும் இங்கு உள்ளன.
இந்த வளாகம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதேபோல் கட்டடம் நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டடத்தில் விரிசல், மேல்பகுதியும் சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் நீா் ஒழுகும் நிலையுள்ளது. அதிலும், பலத்த மழையின்போது மரங்கள் சாய்ந்து கட்டடத்தில் விழுவதால், மிகவும் பயத்துடன் அலுவலகத்தில் பணியாளா்கள் பணிபுரிந்து வரும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.
அதனால், வட்டார கல்வி அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும். இல்லையென்றால் திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட இடத்தில் புதிய அலுவலகம் கட்டடம் அமைத்து தந்தால் எளிதாக வந்து செல்ல உதவியாக இருக்கும்.
எனவே பணிப்பதிவேடுகளை பாதுகாக்கவும், பணியாளா்களின் நலன்கருதியும் கட்டடம் கட்ட வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.
