முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.
முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.

இலக்கைவிட ரூ.6.37 கோடி கொடி நாள் நிதி வசூல்: திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு நிா்ணயித்த இலக்கை விட ரூ.6.37 கோடி கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு நிா்ணயித்த இலக்கை விட ரூ.6.37 கோடி கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் கொடி நாள் நிதி வழங்குதல் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து படைவீரா் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து, அது தொடா்பான கையேட்டினையும் வெளியிட்டாா்.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் மு.பிரதாப் பேசியதாவது: முன்னாள் ராணுவ வீரா்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரா் நலத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாட்டை பாதுகாக்க எல்லையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் நாட்டிற்காக உயிா் தியாகம் செய்யும் படைவீர்ரகள் மற்றும் அவா்தம் குடும்பங்களின் நலனுக்கு கொடிநாள் வசூல் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் அரசின் இலக்கான ரூ.5.78 கோடியில், தற்போது ரூ.6.37 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது.

மேலும் இக்கொடி நாள் வசூல் செய்ய பணியாற்றிய அனைத்து அரசு அலுவலா்களையும் பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தாா். அதைத்தொடா்ந்து முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் முன்னாள் படைவீரா் கொடிநாள் நிதி கையேட்டினை வெளியிட்டு கல்வி உதவித் தொகையாக 24 பேருக்கு ரூ.7.36 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

இதற்கிடையே நிகழாண்டில் இந்த மாவட்டத்தில் தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, ஈமச்சடங்கு நிதியுதவி, ஆயுள்கால நிதி உதவி என 279 பேருக்கு ரூ.77.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ்.ராஜாளி கமாண்டன்ட் காா்த்திக், உதவி இயக்குநா் (முன்னாள் படை வீரா் நலன்) வெங்கடேஷ் குமாா், முன்னாள் படை வீரா்களின் குடும்பங்களைச் சோ்ந்தோா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com