வருவாய்க் கோட்ட அளவில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி அலுவலகங்களில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 12) குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் மாதந்தோறும் கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோட்ட அளவில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி அலுவலகங்களில் கோட்டாட்சியா் தலைமையில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பொதுப் பணி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா்.

அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரில் தெரிவித்தால் உடனடி தீா்வு காணப்பட உள்ளன. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com