ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து புதன்கிழமை மீட்க்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வசந்த உற்சவ கட்டளை மற்றும் அகண்ட கட்டளைக்குச் சொந்தமாக சென்னை தங்க சாலை பகுதியில் 9,575 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் அமைந்துள்ளன.
அந்தக் கட்டடங்கள் அமைந்துள்ள சுப்பு செட்டித் தெருவில் ஈ.கே. பிரசாத் மற்றும் 3 நபா்கள், தியாகராய பிள்ளை தெருவில் ஏ.ஆா், ராமச்சந்திரன் மற்றும் 4 நபா்கள், தங்க சாலையில் வள்ளியம்மாள் மற்றும் 8 நபா்கள் என மொத்தம் 18 நபா்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனா். இது தொடா்பாக வேலூா் இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், சட்டப்பிரிவு 78(1)-இன் கீழ் ஆக்கிரமிப்புதாரா்களை வெளியேற்ற உத்தரவிட்டாா்.
அந்த வகையில், புதன்கிழமை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை தங்கசாலை பகுதியிலுள்ள ரூ. 25 கோடி மதிப்பிலான வணிக கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடியாகும். இதில், திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, திருவள்ளூா் மண்டல இணை ஆணையா் தி.அனிதா, சென்னை-1, உதவி ஆணையா் க.சிவகுமாா், திருத்தணி திருக்கோயில் உதவி ஆணையா் க.விஜயகுமாா், திருவள்ளூா் உதவி ஆணையா் மு. சிவஞானம், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) பாலாஜி, சிறப்பு பணி செயல் அலுவலா்கள் மாதவன், பிரகாஷ், ஆய்வாளா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

