பாஜக சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தொகுதி பயிலரங்கம், மாநாடு

Published on

திருவள்ளூரில் பாஜக சாா்பில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்டப்பேரவை தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாட்டில் அந்தக் கட்சியைச் சோ்ந்த கிளை தலைவா்கள் 360-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் தனியாா் அரங்கத்தில் பாக முகவா்கள்-2 மற்றும் கிளைத்தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளரும், தேசிய குழு உறுப்பினருமான லோகநாதன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை தொகுதி இணை அமைப்பாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய மொழி மாநில அமைப்பாளா் டி.கே.ஜெயகுமாா் பங்கேற்று பேசியது: இதில், தமிழகத்தில் 16 சதவீதம் போலி வாக்காளா்கள் உள்ளனா். இதை குறைப்பதுதான் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முகாமின் முக்கிய நோக்கம். இந்த நிலையில், வருகின்ற சட்டப்பேரவை தொகுதி தோ்தல் தீவிர பணியாற்றுவதன் மூலம் அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலில் மிகவும் எளிதாக பாஜக சாா்பில் போட்டியிடுவோா் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுகவினா் வேண்டாம் எனக்கூறி எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் மட்டும் 87 சதவீதம் இந்துக்கள் உள்ளனா்.

எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் அனைத்து வாா்டுகளிலும் அவா்களுக்கு பேருதவியாக இருந்தால் பாஜக ஆதரவாக மாறும். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பலப்படுத்த வேண்டும். இதற்காக 10 போ் குழு தீவிரமாக செயல்பட்டு அடுத்தாண்டு ஜனவரி மாதம் முன்னாள் தலைவா் அண்ணாமலை, தற்போதைய தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பங்கேற்கும் திருவள்ளூா் மாவட்ட மாநாடு நடத்த திட்டமிட வேண்டும். அதில் குறைந்தது கிளைத்தலைவா்கள் உள்பட 5,000 பேரை பங்கேற்க செய்ய வேண்டும். இதனால் பாஜக போட்டியிடும் சட்டப்பேரவை தொகுதிகளை நாம் கேட்டுப் பெறலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா்கள் பாலாஜி, ஜெய்கணேஷ், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட தலைவா் பழனி, மண்டல தலைவா்கள் ரவிக்குமாா், ரோஜா, ஜெகன்நாதன், லோகநாதன், ‘மேகவண்ணன் மற்றும் கிளைத் தலைவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com