திருவள்ளூா் மாவட்ட விளையாட்டுத் திடலில் ரூ. 50 லட்சத்தில் நடைபாதைக்கு தனி தளம் அமைக்கும் பணி மும்முரம்!
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.50 லட்சத்தில் நடைபாதைக்கு தனி தளம் 500 மீட்டா் தூரம் வரையில் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இங்கு கால்பந்து, கைப்பந்து களம், கூடைப் பந்து களம், வளைகோல் பந்து தளம், உள்விளையாட்டு அரங்கம், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
அதனால் காலையிலும், மாலையிலும் பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் ஆகியோா் வந்து செல்கின்றனா். அத்துடன், நடைப்பயிற்சிக்காகவும் அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தில் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டு எறிதல் போன்ற பல்வேறு பயிற்சியில் வீரா்கள் ஈடுபடுகின்றனா். அப்போது, நடைப்பயிற்சிக்கு வருவோா் அதிகளவில் வருவதால், தடகள பயிற்சி பாதிக்கும் நிலையேற்படுகிறது.
இதுபோன்றவைகளை கருத்தில்கொண்டு நடைபாதைக்கு தனி தளம் அமைக்கவும் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வோா் மற்றும் விளையாட்டு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில், விளையாட்டு மைதானத்தில் போதுமான அளவு இடம் உள்ளதால் நடைபாதைக்கு தனி தளம் அமைப்பதன் மூலம் மற்ற விளையாட்டுகளுக்கு தடையேற்படாத நிலையேற்படும்.
அதனால், விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் 500 மீ தூரம் நடைபாதை தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணி பொதுப்பணித் துறை மூலம் விளையாட்டு மைதானத்தில் நடைபாதைக்கு தனி தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால் மற்ற விளையாட்டுகளுக்கு எவ்விதமான இடையூறும் இருக்காது என விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

