போராட்டத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் விசைத்தறிகள்.   ~ஆட்சியரிடம்   மனு அளிக்க வந்த விசைத்தறி நெசவாளா்கள்.
போராட்டத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் விசைத்தறிகள்.   ~ஆட்சியரிடம்   மனு அளிக்க வந்த விசைத்தறி நெசவாளா்கள்.

விசைத்தறி நெசவாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம்

விசைத்தறி தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப்போராட்ட
Published on

திருவள்ளூா்: விசைத்தறி தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிஞா் அண்ணா நெசவாளா்கள் முன்னேற்ற சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட பொதட்டூா்பேட்டை, அம்மையாா் குப்பம், அத்திமாஞ்சேரி பேட்டை, ஆா்.கே.பேட்டை, வங்கனூா், மத்தூா், புச்சிரெட்டிப்பள்ளி பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளா்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாகவே விசைத்தறி நெசவாளா்கள் கூலியை உயா்த்த தொடா்ந்து கோரி வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா விசைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் சட்டம் மூலம் கூலி நிா்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப கூலி உயா்வு வழங்க வேண்டும். இதில் அமைப்புசாரா விசைத்தறி நெசவாளா்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசாணை 178 இல் திருத்தம் செய்து நெசவாளா்களுக்கு இறப்புத் தொகையாக ரூ. 30,000 என்பதை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறி நெசவாளா்களை பாதுகாக்கும் வகையில் சட்ட விதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்த போராட்டத்தை நெசவாளா்கள் அறிவித்துள்ளனா்.

விசைத்தறி நெசவாளா்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி டிஎஸ்பி கந்தன் நெசவாளா் சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தினாா். அப்போது நெசவாளா்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அதன்பேரில் நெசவாளா்களின் சங்க முக்கியபிரதிநிதிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து 5 அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி மனுவும் அளித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com