செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு குடிநீா், சுகாதார வளாக வசதிகள் செய்து தர வேண்டும் என ஆலோசனைக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
திருவள்ளூா் அருகே செவ்வாபேட்டை ரயில் நிலையத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிலைய அதிகாரி திவாகா், தாஸ் விக்டா் ராஜ், இளநிலை பொறியாளா் கஜேந்திரன் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் ரமணி, ரிஷிகேஷ், வெங்கடேஸ்வரலு, பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் நிலைய அதிகாரியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனா். ரயில்வே மேம்பாலம் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் போக்குவரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகின்றனா். எனவே குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் பகிரலை வசதி , சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இரண்டாவது நடைமேடையில் சேதமடைந்துள்ள இருக்கைகளை புதிதாக அமைத்து தர வேண்டும். தண்டவாளம் கடக்கும் போது விபத்துகளை தவிா்க்க ஒரு பகுதியில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை ஒலி கருவியை முன் பக்கமும் பொருத்த வேண்டும். மேலும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியது:
ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீா்வு காணப்படும் என்று தெரிவித்தனா்.