வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பாலப் பணிகள்
திருவள்ளூா் அருகே நடைபெற்று வரும் வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை-அரக்கோணம் ரயில்வே மாா்க்கத்தில் திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோா், அவசர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. அப்போது, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அப்போது, அடிக்கடி பயணிகள் விரைவு ரயில், மின்சார ரயில், சரக்கு ரயில்கள் 200 தடவைக்கு மேல் சென்று திரும்புகின்றன.
அப்போது, ரயில்வே கேட்கள் அடைக்கப்படுவதால் இருபுறமும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மெகா சைஸ் தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, இதுவரை நடந்துள்ள பணிகள் விவரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, குறிப்பிட்ட பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் குறித்து எடுத்துரைத்தனா். அதனால், காலதாமதமின்றி விரைந்து முடித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அவா் வலியுறுத்தினா்.
முன்னதாக, மீஞ்சூா் பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகள், இணைப்புச் சாலை பணிகளையும் அவா் ஆய்வு செய்ததுடன், தரமாக மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.