திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா தொடக்கம்
திருத்தணி: முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடாகத் திகழும் சிறப்பு பெற்ற திருத்தலமான திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து மாசிப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருவிழா 12 நாள்கள் கோலகாலமாக நடைபெறுவதும், இதையொட்டி காலை மாலை உற்சவா் பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி மலைக்கோயிலில் மாடவீதியுலா வருவதும் வழக்கம்.
அந்த வகையில் மாசிப் பெருவிழா திங்கள்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 5 மணிக்கு கொடிமரத்திற்கு அருகில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் முருகப் பெருமான் எழுந்தருள, கோயில் அா்ச்சகா்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மலா்களால் அலங்கரித்து மாசிப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கிவைத்தனா்.
இதில், திருக்கோயில் அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, உஷாரவி, நாகன், பேஸ்கா் அன்பழகன் உள்பட பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழா தொடா்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ளது. பக்தா்கள் வசதிக்காக திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு.ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி மற்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.