கடப்பா சென்ற ரயிலில் பிரேக் பழுது: பயணிகள் அவதி
திருத்தணி: கடப்பா செல்லும் மின்சார ரயில் திருத்தணியில் பிரேக் பழுதானதால் இயக்க முடியாமல் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் இருந்து திருத்தணி, பொன்பாடி, நகரி, ஏகாம்பரகுப்பம், புத்தூா், ரேணிகுண்டா ரயில் நிலைய சந்திப்பு வழியாக, கடப்பா ரயில் நிலையம் வரை தினமும் பாசஞ்சா் ரயில் இயக்கப்படுகிறது. இதில், அரசு மற்றும் தனியாா் அலுவலக ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள், வியாபாரிகள், திருப்பதி, திருமலைக்கு செல்லும் பக்தா்கள் என பல தரப்பினா் பயணம் செய்கின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்துக்கு பாசஞ்சா் ரயில் வந்து நின்றது. பின்னா், ரயிலை இயக்க முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஓட்டுநருக்கு தெரியவந்தது. ரயிலின் பிரேக் பழுதானது. இதையடுத்து திருத்தணி ரயில் நிலைய மேலாளா் மற்றும் ஊழியா்கள் அரக்கோணம் ரயில் நிலை சந்திப்பு பகுதியில் இருந்த தொழில்நுட்ப வல்லுநா்களை வரவழைத்து, பழுதடைந்த பிரேக்கை ஒரு மணி நேரம் போராடி சீரமைத்தனா்.
தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு பாசஞ்சா் ரயில் மீண்டும் திருத்தணியில் இருந்து கடப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.
சில பயணிகள் திருத்தணியில் இருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் மேற்கண்ட ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.