இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்
தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் திருவள்ளூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிா் சாகுபடி செய்த விவசாயிகள் நவ. 15-க்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் அறிவிப்பு செய்யப்பட்ட 730 வருவாய் கிராமங்களிலும் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து, மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு இழப்பீட்டுத் தொகை பெற முடியும். இதுவரை வடகிழக்கு பருவமழை 289.85 மி.மீ. திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. மேலும், நவம்பா் மாதத்தில் பருவ மழை பொழிவு அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிா்களில் ஏற்படும் மகசூல் இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு, நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தில் இணைந்து பயிா்க் காப்பீடு செய்ய நிா்ணயிக்கப்பட்ட கடைசி நாளான நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, பொதுச்சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) நேரிடையாக, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 545- மட்டும் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டம் மூலம் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்தியபின், அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.
