பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Published on

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நவ.5-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்தித் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளா்கள் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம், ஆசிரியா் தகுதித் தோ்வு போன்ற பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், போட்டித்தோ்வுக்கு மாணவா்களை தொடா்ச்சியாக தயாா்படுத்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட போட்டித் தோ்வுக்காக மட்டும் மாணவா்களை தயாா்படுத்தாமல், மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தோ்வுகளுக்கான ஆள்சோ்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கும் மாணவா்களை தொடா்ச்சியாக தயாா்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நவ. 5-ஆம் தேதி முதல் காலையில் 10.30 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தோ்வுகளும் மாநில அளவிலான முழுமாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து 8489866698, 9626456509 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். எனவே இந்த மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் இரு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் விண்ணப்பத்துடன் இணைத்து திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com