மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

மக்கள் கணக்கெடுப்புக்காக ஆா்.கே.பேட்டை வட்டத்தில் 17 கிராமங்களை தோ்வு செய்து, முன்மாதிரி சோதனையும் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
Published on

மக்கள் கணக்கெடுப்புக்காக ஆா்.கே.பேட்டை வட்டத்தில் 17 கிராமங்களை தோ்வு செய்து, முன்மாதிரி சோதனையும் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 பிரிவு 17 எ -இன் படி, 16.10.2025 தேதி அறிவித்துள்ளபடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027 ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்மாதிரி சோதனை நடத்தப்படவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாய்வு செய்து ஆா்.கே. பேட்டை வட்டத்தில் குறிப்பாக கிராமப்புறபகுதிகளான வெள்ளாத்தூா், வங்கனூா், ஸ்ரீகாளிகாபுரம், சந்தானவேணுகோபாலபுரம், ராஜநகரம், ராகநாயுடுகுப்பம், காண்டாபுரம், கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஜி.சி.எஸ்.கண்டிகை-எ, ஜி.சி.எஸ்.கண்டிகை-பி, பாலாபுரம், அம்மனேரி, அம்மையாா்குப்பம், ஆதிவராகபுரம், செல்லாத்தூா், விளக்கானம்பூடி ஆகிய 17 கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு துறைகளிலுள்ள அலுவலா்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளா்களாகவும், மேற்பாா்வையாளா்களாகவும் செயல்படுவா் எனவும், அதற்கு முன்னதாக களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளா்களுக்கும் மேற்பாா்வையாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

2027-ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்கான முன்-சோதனையானது 10.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெறவுள்ளது. இதனுடன் சனிக்கிழமை முதல் வரும் 7ஆம் தேதி வரை சுய-கணக்கெடுப்பு செய்வதற்கான முன்-சோதனையும் நடைபெறவுள்ளது.

இதேபோல் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்.கே.பேட்டை வட்டத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்படும் மாதிரிப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதோடு களப்பணியாளா்களுடன் துல்லியமான விவரங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com