100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங்க வேண்டும் எனக்கோரி
பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
பூண்டி ஊராட்சி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சோ்த்து இருப்பதாகவும், மீதம் உள்ளவா்களை சோ்க்காமல் அலைக்கழித்து வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது வேலைக்கான இடம் தோ்வு செய்து சொல்லுங்கள் என கூறுகின்றனா்.
அதனால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை நம்பியுள்ள பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். அது மட்டுமின்றி சாலை வசதி இல்லாதது குடிநீா் வசதி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அதிகாரிகளிடம் மனு அளித்தாலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களின் நிலையறிந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

