திருத்தணி முருகன் கோயில் வளா்ச்சிப் பணிகள்: அறங்காவலா் குழு ஆய்வு
திருத்தணி: முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாஸ்டா் பிளான் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.
இதன்படி, அன்னதானக் கூடம், மலா்மாலை, பூஜை பொருள்கள் மற்றும் வழிபாட்டு பொருள்கள் விற்பனை நிலையம், கலை வேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை ராஜகோபுரத்தினையும், தோ் வீதியினையும் இணைப்பு படி கட்டும் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ரூ.86.76 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கி வைத்தாா்.
தற்போது திருத்தணி முருகன் கோயிலில் மாஸ்டா் பிளான் திட்டத்தின் மூலம் ராஜகோபுர இணைப்புப் பாதை, வாகன நிறுத்த விரிவாக்கம், சுங்கச்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதனால் முருகன் மலைக்கோயில் மேல் பக்தா்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் முருகன் கோயில் இணை ஆணையா் ரமணி, அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு. நாகன் கோ. மோகனன் ஜி. உஷாரவி, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
தற்காலிகமாக முக்கண் விநாயகா் கோயில் பின்புறம் உள்ள இடம் மற்றும் காா்த்திகேயன் குடில்களில் உள்ள காலி இடங்களை சீரமைத்து வாகனங்களை நிறுத்த முடிவு செய்துள்ளனா். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

