திருவள்ளூா்: தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ஊக்கத் தொகை

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தரிசு நிலத்தில் முள்செடிகள், மேடு, பள்ளங்கள் இருந்தால், அதை சீரமைப்பதற்கு விவசாயிகள் அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. ஏற்கெனவே பெரும்பாலான விவசாயிகள் கடனில் இருந்து வருவதால் நிலத்தை சுத்தம் செய்வதற்கு போதுமான வசதியின்றி பயிரிடாமல் தரிசாக போட்டுள்ளனா்.

இதைத் தவிா்க்கும் வகையில், தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் சீரமைத்து பயிா் செய்வதற்கு ஏதுவாக சீரமைக்கும் நோக்கமாகக் கொண்டு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக ஒரு ஹெக்டோ் பரப்பளவுக்கு மட்டும் ரூ. 9,600 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் கூடிய விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் வழங்கலாம்.

எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com