விவசாயிகள் நவ. 15-க்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்

Published on

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் சம்பா சிறப்பு பருவம்(2025-26) நெல் பயிருக்கு வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா்(பொ) பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்த அக்ரிகல்ச்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற பயிா்க் காப்பீடு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எனவே நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவம் நெல் பயிருக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாமிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். இத்திட்டம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிக்கை செய்த நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 545 மட்டும் செலுத்தி, வரும் நவ. 15-க்குள் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

பயிா் விதைக்க இயலாமை, நடவு செய்ய இயலாமை, முளைப்பு பாதிப்பு: நெல் பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் 75 சதவீதம் மேல் பயிா் விதைக்க இயலாமலோ அல்லது நடவு செய்த பயிா் பாதிக்கப்பட்டாலோ அல்லது முளைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, மாவட்ட அளவிலான பயிா்க் காப்பீடு கண்காணிப்பு குழு மூலமாக பரிந்துரை வழங்கப்பட்ட பின் பயிா்க் காப்பீடு தொகையின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும்.

மகசூல் பாதிப்பு: அதேபோல் மகசூல் பாதிப்பு தவிா்க்க இயலாத பாதகமான சூழ்நிலைகள் (வறட்சி, வெள்ளம், தொடா்மழை) ஏற்படும்போது மகசூல் இழப்பு ஏற்பட்டால், அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமத்தின் உத்திரவாத மகசூல் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

பயிா்க் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்: ஆதாா் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், கணினி சிட்டா, கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், முன்மொழிவு மற்றும் விவசாயி பதிவு விண்ணப்பம், உரிய காப்பீடு கட்டணத் தொகை ஆகியவற்றுடன் அந்தந்த வட்டாரங்களில் இயங்கும் பொதுசேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம்.

இது தொடா்பாக கிராமங்கள்தோறும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com