பிரதமரின் கௌரவ நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதி உதவிபெறும் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண் கட்டாயம் பெற்று வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதி உதவிபெறும் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண் கட்டாயம் பெற்று வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் கௌரவ நிதி உதவி பெற விவசாயிகளின் தனித்துவ அடையாள அட்டை எண் அவசியமாகும். அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 9,727 போ் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா். மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ரூ. 2,000 உதவித் தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசின் பல்வேறு வேளாண் சாா்ந்த திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.

இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பொது சேவை மையத்தின் மூலம் தங்களின் நில உடமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னா், அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் பதிவு செய்து தரப்படும்.

2025-26- ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிா் காப்பீடு திட்டம் போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற ஏதுவாக தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.

இதற்காக வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை வேளாண் வணிகத் துறை, பொது சேவை மையம் மற்றும் வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மாதத்தில் 21-ஆவது பிரதம மந்திரி கௌரவ நிதி தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. இந்த தவணை தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்றிருத்தல் அவசியமாகும். எனவே வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் தங்களது நில உடமை விவரங்கள், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com